இரண்டாவது வெற்றி பெறுமா சிஎஸ்கே? ராயல்சுடன் இன்று மோதல்

1 month_ago 4

ஷார்ஜா: ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஐபிஎல் டி20 லீக் ஆட்டம், ஷார்ஜாவில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது.நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடக்க போட்டியில் மோதிய சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. அடுத்து தனது 2வது லீக் ஆட்டத்தில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் சென்னை அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் டு பிளெஸ்ஸி, ராயுடு, சாம் கரன் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், தொடக்க வீரர்கள் எம்.விஜய், வாட்சன் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இதனால், 2வது போட்டியில் அவர்கள் கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கேப்டன் டோனியின் அதிரடி பேட்டிங் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பும் நீடிக்கிறது. பந்துவீச்சில் என்ஜிடி, ஜடேஜா, தீபக் சாஹர் விக்கெட் வேட்டை நடத்தினாலும், அதிக ரன் விட்டுக் கொடுத்தனர். பியுஷ் சாவ்லா துல்லியமாகப் பந்துவீசி 4 ஓவரில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆஸி. நட்சத்திரம் ஸ்மித் தலைமையிலான ராயல்ஸ் அணியில் சாம்சன், ஜெய்ஸ்வால், உத்தப்பா, மில்லர், பட்லர், டாம் கரன் என அதிரடி வீரர்கள் அதிகமுள்ளதால், சென்னை பந்துவீச்சாளர்களுக்கு சரியான சவால் காத்திருக்கிறது. ஆர்ச்சர், உனத்கட், ஆரோன் வேகம், சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும்.இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் கடைசி பந்து வரை ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷேன் வாட்சன், பாப் டு பிளெஸ்ஸி, லுங்கி என்ஜிடி, டுவைன் பிரோவா, இம்ரான் தாஹிர், முரளி விஜய் (தமிழ்நாடு), தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, கே.எம்.ஆசிப், ஜோஷ் ஹேசல்வுட், கரண் சர்மா, நாரயணன் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர், தமிழ்நாடு), அம்பாதி ராயுடு, கேதார் ஜாதவ், பியுஷ் சாவ்லா, மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாகூர், சாய் கிஷோர் (தமிழ்நாடு), ருதுராஜ் கெய்க்வாட், மோனு குமார், சாம் கரன்.ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஆண்ட்ரூ டை, கார்த்திக் தியாகி, அங்கித் ராஜ்பூட், ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் திவாதியா, ஜெய்தேவ் உனத்கட், மயாங்க் மார்கண்டே, மகிபால் லோம்ரர், ஒஷேன் தாமஸ், ரியான் பராக், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், ஜோப்ரா ஆர்ச்சர், டேவிட் மில்லர், ஜோஸ் பட்லர், மனன் வோரா, ஷஷாங்க் சிங், வருண் ஆரோன், டாம் கரன், ராபின் உத்தப்பா, அனிருதா ஜோஷி, பென் ஸ்டோக்ஸ்.நேருக்கு நேர்...ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 3முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று களம் காண உள்ளன. இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 14 ஆட்டங்களில் சென்னையும், 7 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வெற்றியை வசப்படுத்தியுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 4ல் சென்னையும், ஒன்றில் ராஜஸ்தானும் வென்றுள்ளன. ராஜஸ்தானுக்கு எதிரான சென்னை அதிகபட்சமாக 246 ரன்னும், சென்னைக்கு எதிராக ராஜஸ்தான் அதிகபட்சமாக 223 ரன்னும் குவித்துள்ளன. அதே நேரத்தில் ராஜஸ்தானை 126 ரன்னில் சென்னையும், சென்னையை 109 ரன்னில் ராஜஸ்தானும் சுருட்டியுள்ளன.

Read Entire Article