ஊட்டி அருகே எமரால்டு பகுதியில் தரமில்லாத நிவாரண முகாம்: மக்கள் பாதிப்பு

4 week_ago 3

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத துவக்கத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டியது. குறிப்பாக குந்தா தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் மழை காரணமாக வீடுகள் இடிந்தும், அபாயகரமான பகுதிகளில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக எமரால்டு பகுதியில் தலா ரூ.60 ஆயிரம் மதிப்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட தற்காலிக குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்நிலையில் இம்முறையும் கடந்த ஆண்டை போல கடந்த மாதம் 7,8 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டியது. இந்த கனமழையின் போது வீசிய பலத்த காற்று காரணமாக தற்காலிக குடியிருப்புகளின் மீது அமைக்கப்பட்டிருந்த தகர கூரை சேதமடைந்தது.இதனிடையே கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக எமரால்டு அருகே வஉசி.,நகர், வினோபாஜி நகர், பெரியார்நகர், எம்ஜிஆர்., நகர், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்படைந்தனர். மண் சுவர்களால் ஆன பலரது வீடுகள் இடிந்தன. மேலும் அவர்கள் வசித்து பகுதிகள் அபாயகரமான பகுதிகள் என்பதால் பாதுகாப்பு கருதி 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் எமரால்டு அரசு பள்ளியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 10 நாட்கள் அங்கு தங்க வைக்கப்பட்ட பின்னர், அனைவரும் தற்காலிக குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக அங்கு தங்கி வருகின்றனர்.இந்த சூழலில் எமரால்டு பகுதியில் மலைஉச்சியில் கட்டப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்புகள் தரமாக கட்டப்படவில்லை. இதனால் இங்கு தங்கியுள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 10 அடி அகலம், 16 அடி நீளம் கொண்ட ஒவ்வொரு குடியிருப்பிலும் மழை பெய்யும் போது மழைநீர் கசிந்து வருகின்றன. அவை தரையில் தேங்கி விடுவதால் கீழே படுத்து உறங்க கூட முடியாமல் அவஸ்தை பட்டு வருகின்றனர். பக்கவாட்டு சுவர்களில் ஈரம் கசிந்து நீர் குடியிருப்புகளுக்குள் வருகின்றன. இதனால் கடுமையாக குளிர் நிலவி வருகிறது.பலத்த காற்று வீசும் போது குடியிருப்புகளுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகள் பெயர்ந்து விடுகின்றன. கூரைகளில் இருந்து ஒழுகும் தண்ணீர் குடியிருப்புக்குள் கொட்டாமல் இருக்கும் வகையில் பிளாஸ்டிக் போர்வைகளை கட்டி வைத்துள்ளனர். அவற்றில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் உறக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த இரு மாதங்களாக தற்காலிக குடியிருப்புகளில் இவர்கள் வசித்து வரும் நிலையில் போதிய வேலையின்றி வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு சார்பில் அவர்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு நிரந்தர குடியிருப்பு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதனை விரைந்து மேற்கொண்டு தங்களது இன்னல்களை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே கடந்த மாதம் வீசிய பலத்த காற்று காரணமாக பல குடியிருப்புகளில் மேற்கூரைகள் பறந்த நிலையில், அவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹாலோ பிளாக் கற்கள் கொண்டு வரப்பட்டு கூரைகள் மீது வைத்து கட்டப்பட்டு வருகிறது.இதுகுறித்து தற்காலிக குடியிருப்பில் வசித்து வரும் ஊராட்சி கவுன்சிலர் கண்ணன் கூறுகையில், கடந்த மாதம் கனமழை பெய்தது. அப்போது நாங்கள் வசித்த பகுதி பாதுகாப்பில்லாதது என்பதாலும், பலரது வீடுகள் இடிந்ததாலும் எமரால்டு பள்ளியில் உள்ள முகாமில் தங்கினோம். தொடர்ந்து சில நாட்களில் இங்குள்ள தற்காலிக குடியிருப்புகளுக்கு எங்களை மாற்றினார்கள். இங்கு  காற்று வீசும் சமயங்களில் கூரைகள் சேதமடைகின்றன. மேலும் மழை நீர் குடியிருப்பிற்குள் வந்து தரை தளம் ஈரமாகி விடுகிறது. இதனால் வசிக்க முடியாத அளவிற்கு சிரமத்தை சந்தித்து வருகிறோம். குறிப்பாக குழந்தைகளை வைத்துள்ளவர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளோம்’, என்றார்.

Read Entire Article