தமிழகத்தில் ஆணவக்கொலைகளா?: உ.பி., ஹரியானாவில்தான் அதிகமாக நடக்கிறது என எண்ணினோம்...உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வியப்பு.!!!

4 week_ago 5

டெல்லி: சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவரான கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில் இருவரும் கோயிலுக்கு சென்றபோது 2015 ஜூன் 23ம் தேதி மாயமானார். இதுதொடர்பாக  திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் 2015 ஜூன் 24ம் தேதி கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் பிணமாக கிடந்தார். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர்  யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கொலை செய்ததாக புகார் எழுந்ததையடுத்து யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை தமிழக காவல்துறையால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கை விசாரணை நடத்தி முடிக்க 6 மாதம் காலம் அவகாசம் உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை சார்பில் கேட்கப்பட்டது.  மேலும், வழக்கின் குற்றவாளி யுவராஜ் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, தமிழகத்திலும் ஆணவக்கொலைகள் நடக்கிறதா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். உத்தரப்பிரதேசம்,  ஹரியானாவில்தான் ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கிறது என நாங்கள் எண்ணினோம் என்று தெரிவித்த நீதிபதி, தமிழக காவல்துறை இந்த வழக்கை 6 மாதங்களுக்கு விசாரித்த முடிக்க வேண்டும் எனக்கூறி 6 மாதம் கூடுதலாக  வழங்கினார். அதேசமயம், வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் யுவராஜ் உள்ளிட்ட யாருக்கும் ஜாமீன் வழங்கப்படாது என்று வாய்மொழியாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.  

Read Entire Article