திருப்பூரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் திடீர் மரணம்!!!.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!!

4 week_ago 2

திருப்பூர்:  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நல்லூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் என்பவர் உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியரையும் உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மீது திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை மணிகண்டனின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் அவரை அடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையில் காவல் நிலையத்தில் மணிகண்டனின் உறவினர்கள் இருந்த நிலையில், அவர்களிடம் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் மணிகண்டனை போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதன்பின்பே, உறவினர்களுக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதாலேயே மணிகண்டன் உயிரிழந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், மருத்துவமனைக்கு விரைந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.

Read Entire Article