புதுச்சேரி சட்டமன்ற மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரபரப்பு: அதிகாரிகளிடம் எம்எல்ஏக்கள் சரமாரி கேள்வி

4 week_ago 3

புதுச்சேரி: புதுவையில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது குறித்து சட்டமன்ற மதிப்பீட்டு குழு கூட்டத்தில் அதிகாரிகளிடம் எம்எல்ஏக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.புதுச்சேரி சட்டசபை 4வது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் மதிப்பீட்டுக்குழு மற்றும் பொது கணக்கு குழு இணைந்த கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் (அதிமுக), பொதுக்கணக்கு குழு தலைவர் சிவா (திமுக) ஆகியோர் தலைமை தாங்கினர். எம்எல்ஏக்கள் வெங்கடேசன், கீதா ஆனந்தன், வையாபுரி மணிகண்டன் மற்றும் தலைமை செயலர் அஸ்வினி குமார், துறை செயலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய அன்பழகன் எம்எல்ஏ அதிகாரிகளை கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், கொரோனா இறப்பைத் தடுப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏதோ ஒரு விதத்தில் தவறியுள்ளதால் இன்றைக்கு இந்தியாவிலேயே மரண விகிதம் நமது மாநிலத்தில் அதிகமாகியுள்ளது வருத்தமளிக்கிறது. புதுச்சேரியைவிட அதிக மக்கள் தொகையை கொண்ட அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் இறப்பு விகிதம் 1.1 சதவீதமாக இருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் 2.01 சதவீதம் என்பது மிக அதிகம்.கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவத்துடன் சித்தா, யோகா, ஆயுர்வேதம் என ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை முன்னெடுப்பதில் ஏன் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் புதுச்சேரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆரம்ப கட்டத்தில் அளிக்கப்பட வேண்டிய ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்படுவதில்லை. கொரோனாவால் உயிர் இழக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு இதுவரை அரசாணை வெளியிடவில்லை.ராசு உடையார் தோட்டத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவரின் மனைவி ஆதியம்மாள் கடந்த 20ம் தேதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு முழுவதும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் முன்வரவில்லை. அவர் நடந்தே அதிகாலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து, அவரது வீட்டிலேயே இறந்துவிட்டார். இந்த சம்பவம் மருத்துவமனையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்கான உதாரணமாக இருக்கிறது. சரியான திட்டமிடுதல், ஒருங்கிணைப்பு, போட்டி மனப்பான்மை, அலட்சியம், அர்ப்பணிப்பு இல்லாமை, காலத்தோடு உரிய உபகரணங்கள், மருந்துகள் வாங்காதது, தேவையான மருத்துவர், செவிலியர் நியமனம் செய்யாதது போன்றவைகள் முக்கிய காரணங்களாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதேபோல் திமுக எம்எல்ஏ சிவா உள்ளிட்டோர் அதிகாரிகளை கண்டித்து பேசினர்.மருத்துவமனை கழிவறையை மட்டும் சுத்தம் செய்தால் போதாதுசட்டமன்ற மதிப்பீட்டு குழு கூட்டத்தில், பொதுக்கணக்கு குழு தலைவர் சிவா எம்எல்ஏ பேசியதாவது: புதுவையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அரசின் கணக்குப்படி இறப்பு எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது. ஆனால் உண்மையில் புதுவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துள்ளனர். ஆனால் அரசு அவைகளை மறைத்து, குறைத்து காண்பித்து வருகிறது. ஆரம்பகாலத்தில் அதிகம்பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாததே, கொரோனா தொற்று புதுவையில் வேகமாக பரவியதற்கு காரணம்.ெகாரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் ஒருவருக்கு கூட வழங்கவில்லை. மருத்துவமனைக்கு சென்று கழிவறையை சுத்தம் செய்தால் மட்டும் போதாது. மருந்துகள் இருப்பு, நோயாளிகளின் நிலை, இறப்பிற்கான காரணம்? உடலை உடனடியாக அடக்கம் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.சனி, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்குமதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் வெங்கடேசன் எம்எல்ஏ பேசியதாவது: புதுச்சேரியில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் மற்றும் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தாகும். இதில் வாலிபர்களும் இறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மார்க்கெட் பகுதிகளில் அதிக கூட்டம் கூடுவதால், அன்றைய தினங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும். தொற்று பாதித்த பெரும்பாலானோர் வீடுகளில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் வீடுகளில் இல்லாமல் வெளியில் சுற்றுவதால் தொற்று அதிகளவில் பரவுகிறது. புதுவையில் சட்டம் ஒழுங்கு கவலை அளிப்பதாக உள்ளது. எனவே போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். போலீசாருக்கு தேவையான பேட்ரோல் வாகனம் வழங்க வேண்டும். பதற்றம் நிறைந்த பகுதிகளில் பேட்ரோல் வாகனங்களில் போலீசார் வலம் வந்தால் ரவுடிகள் பயப்படுவார்கள். தட்டாஞ்சாவடியில் தொழிற்பேட்டை உள்ளதால், அங்கு காவல் நிலையம் அமைக்க வேண்டும். புதுவையில் கஞ்சா கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

Read Entire Article