மகாராஷ்டிராவில் மாவட்டங்கள் இடையே இன்று முதல் பேருந்து போக்குவரத்து: பயணிகள் இ-பாஸ் எடுக்க தேவையில்லை!

1 month_ago 3

மும்பை: மகாராஷ்டிராவில் மாவட்டங்கள் இடையே இன்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 18ம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) தனது சேவையை நிறுத்தியது. ஆனாலும் ஊரடங்கால் சிக்கி தவித்த தொழிலாளர்கள் ஊர் திரும்பும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து கடந்த மே 22ம் தேதி முதல் எம்.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. மேலும் மும்பை பெருநகர பகுதிக்குள் தனியார் ஊழியர்கள் பணிக்கு சென்று வர வசதியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது.  இந்த நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வாக மாவட்டங்களுக்கு இடையே இன்று முதல் பேருந்து போக்குவரத்தை தொடங்க எம்.எஸ்.ஆர்.டி.சி. முடிவு செய்துள்ளது.இதுகுறித்து பேசிய அதன் நிர்வாக இயக்குனரும், துணை தலைவருமான சேகர் சன்னே, மாவட்டங்களுக்கு இடையே எம்.எஸ்.ஆர்.டி.சி. பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பேருந்து சேவையை இன்று முதல் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம், என கூறியுள்ளார். பேருந்து போக்குவரத்து தொடங்கும் நிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி, பயணிகள் இ-பாஸ் எடுக்க தேவையில்லை. வேறு எந்த அனுமதியும் பெற வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் கொரோனா பரவல் தடுப்புக்காக எடுக்க வேண்டிய விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் கட்டாயம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

Read Entire Article