மஞ்சூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டுயானைகள்

4 week_ago 3

மஞ்சூர்: மஞ்சூர் அருகே வாகனங்களை வழி மறித்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூர்- கோவை சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதேபோல் கெத்தை அருகே முள்ளி பகுதியை ஒட்டியுள்ள கேரளா வனப்பகுதிகளில் இருந்தும் ஏராளமான காட்டு யானைகள் இடம் பெயர்ந்து தமிழக பகுதிகளில் ஊடுருவியுள்ளது. இந்த யானைகள் கெத்தை, முள்ளி, மானார், அத்திகடவு உள்ளிட்ட பகுதிகளில் நடமாடி வருவதுடன் சாலையில் ஆங்காங்கே நின்று அவ்வழியாக சென்று வரும் அரசு பஸ்கள், வாகனங்களை வழிமறித்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை கெத்தையில் இருந்து தனியார் வாகனத்தில் பயணிகள் மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். 23வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது 4 யானைகள் வழியை மறித்தபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது.இதை கண்டவுடன் பயணிகள் தங்களது வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார்கள். அதேநேரம் மஞ்சூரில் இருந்து கெத்தைக்கு சென்ற மின்வாரியத்துக்கு சொந்தமான வாகனமும் காட்டு யானைகள் வழிமறிப்பால் சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடுரோட்டில் உலா வந்த யானைகள் பின்னர் அங்கிருந்து காட்டுக்குள் இறங்கி சென்றது. இதன் பிறகே வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. இச்சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் யானைகள் சாலையில் நடமாடி வருவதால் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Read Entire Article