முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவ. 1ல் கல்லூரிகள் திறப்பு: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

3 week_ago 4

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கல்லூரிகளை நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கும்படி பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.  இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 29ம் தேதி கல்லூரிகள் திறப்பது மற்றும் தேர்வுகள் நடத்துவது குறித்து மத்திய அரசின் கல்வித்துறை, பல்கலைக் கழக மானியக் குழு, அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம் ஆகியவை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தன. ஆனால், கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராததால், மேற்கண்ட உத்தரவுப்படி கல்லூரிகளை திறக்கவும் முடியவில்லை. தேர்வுகளையும் நடத்த முடியவில்லை. இதனால், ஏப்ரல் 29ல் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு நேற்று மாற்றி அமைத்தது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு உத்தரவில் கூறியிருப்பதாவது:* திருத்தி அமைக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி, நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி தொடங்கப்பட வேண்டும். அதற்கு முன்பாக அக்டோபரில் மாணவர் சேர்க்கையை முடித்து விட வேண்டும். * நவம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரிகளை விட்டு வேறு கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்றாலோ, விலகினாலோ அல்லது சேர்க்கையை ரத்து செய்தாலோ, அவர்கள் செலுத்திய முழு கல்விக் கட்டணத்தையும் கல்வி நிறுவனங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும்.* தகுதி அல்லது நுழைவுத் தேர்வு அடிப்படையில் இளநிலை அல்லது முதுகலை படிப்புக்கான சேர்க்கை நடத்தப்படுவதாக இருந்தால், அதை அக்டோபர் இறுதிக்குள் முடிக்க வேண்டும். இவற்றில் நிரப்பப்படாத இடங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளும் நிரப்பி முடிக்க வேண்டும்.* முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வை (செமஸ்டர்) 2021 மார்ச் 8ம் தேதியில் தொடங்கி, 26ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.* இறுதி செமஸ்டர் தேர்வை 2021 ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி, 21ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே தகவலை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் பதிவிலும் நேற்று வெளியிட்டுள்ளார்.* நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமைஇந்தாண்டு நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. அன்றைய தினம் கல்லூரியை திறப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், மறுநாளில் இருந்து கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிகிறது.

Read Entire Article